ராஜபாட்டை என்பது அந்நாளில் அரசன் தனது அமைச்சு, படை பரிவாரங்களுடன் பவனி வரும் வீதி. இன்று மன்னராட்சி இல்லை ,ஆனால் ஜனநாயக அரசில் எல்லோரும் இந்நாட்டு மன்னரே . ஆக நமக்கென்று போட்டிருக்கும் ராஜபாட்டை தான் புதிய தேசிய நெடுஞ்சாலைகள்,.. சுதந்திர இந்தியாவில் ஒன்றே போன்று நாம் மகிழும் ஒரே அம்சம்.. வியக்காமல் இருக்க முடியவில்லை. பட்டணம் சேர ஒரு நாள் ஆகும் என்று காத்திருந்து சாப்பாட்டு மூ ட்டையுடன் லோலோ என்று போய் இறங்கும் காலம் போயிற்று. . இரவு உறக்கம் போச்சு, பகல் வேலைகள் விட்டுப் போயிற்று என்றெல்லாம் சொல்லத் தேவை இல்லை. நினைத்த நேரத்தில் ,அதுவும் சொந்தவண்டி என்றால் கேட்கவே வேண்டாம். சல் என்று கிளம்பி பயணிக்க முடிகிறது. பெட்ரோல்,உணவகம் ,இளைப்பாறும் இடவசதி வேண்டும் தூரத்தில் கிடைக்கும் பாங்கை அனுபவிக்க முடிகிறது. நாலு வழிச்சாலையில் போகப் போக எங்கேயோ மிதந்து போவது போன்றுதான் தோன்றுகிறது.பயணக் களைப்பு தெரிவதில்லை. முன்னம் அடுத்தடுத்த ஊர் வருகையில் ஏற்படக்கூடிய நெரிசல் தவிர்க்கப் பட்டுவிட்டன. நெடு தூரம் பயணிக்கையில் எந்த ஊர்களுமே கண்ணில் படுவதில்லை. அன்றைக்கு இடப்புறம் பார்த்தவை எல்லாம் வலப்புறம் மாறித் தெரிகிறது. வலப்புறம் இருந்தவை இடப்புறமாய் வருகிறது. ஆனால் பயணிக்கும் நேரம் பெரிதும் சுருக்கப் பட்டுவிட்டது.
சமீப காலம் வரை மாநிலசிறிய சாலைகளில் அந்தந்த கிராமங்களுக்கு பிரியும் சாலைப்பகுதியை விலக்கு என்று சொல்வர். இது போன்றே தேசிய நெடுஞ்சாலைகளில் பெரிய பெரிய ஊர்களுக்கு பல விலக்கு பாதைகள் நிர்மாணித்துள்ளனர். பலகைகளில் எழுதி குறியீடும் காண்பித்துள்ளனர். ஓட்டுனர்கள் சும்மா ஸ்டீரிங்கை பிடித்து வந்தாலே போதும் .... கவனம் அதிகம் செலுத்த முடியாத பொழுதில் தூக்கம் வருவதை தவிர்த்துக் கொள்வதில் இனி புது கவனம் அவர்கள் செலுத்த வேண்டும்.
பழைய வழித்தடங்களின் அடையாளங்கள் பெரிய அளவில் விழுங்கப் பட்டுள்ளன.பெரும்பகுதி அடர்வு இல்லாத காட்டு வழியாய் நீள்கின்றது. நிசப்தமே மேலோங்கி நிற்கிறது. இத் திறந்த வெளி நீள் பயணம் அழகான எடுப்பான சாலைகளில் தொடர எங்கணும் வியாபித்திருக்கும் அழகை பல கோணங்களில் ரசிக்க முடிகிறது. இரவில் பிரகாசிக்கும் ஸ்டிக்கர்கள் மணிகளின் கோர்வையாய் கண்ணுக்கு தெரிகின்றன. நமது இந்தியாவா..?என்ற மெலிதான அற்புத உணர்வே மிஞ்சுகின்றது.
kothaidhanabalan
No comments:
Post a Comment