Friday, 23 September 2011

தாலாட்டு ஒப்பு தரம் பார்த்து வை.

இந்த மதுரை மண்ணில் நான் திருமணமாகி வந்த பொழுதில் இங்குள்ள 
கிராமங்களில் பேசப்படும் சில சிலேடை மொழிகள் புதிதாகவும் ,புரியாததனமாகவும் இருக்கும்.அவற்றை பொருள் கொள்ளும் முன்னம் போதும் போதும் என்றாகிடும். எந்த சொல்லுக்கும் நேரடி பதில் கிடையாது.உவமான உவமேயங்களுட தான் பதில் கிடைக்கும்.  ரசிக்கும் படியாகவும் இருக்கும். தம்மிடம் இருக்கும் அல்லது இருப்பதுபோன்று ஒரு பொருளை தங்களுக்கு அடங்கியவர் விரும்பி கேட்டால் சடக்கென்று பேசுவர்,'தாலாட்டு ஒப்பு தரம் பார்த்து வைக்கணும் .யாரிடம் வந்து எதை விரும்பிக் கேட்பது..' என்று கோபிப்பார் . பொதுவாக இம்மக்களின் செயல்பாடுகளில் தந்திர முறைகளே வியாபித்திருக்கும்.அதனால் காரியம் வேண்டி யாரும் ஒருவர் அனுகிவிட்டால் போதும் ,சந்தேகமே மனதில் முன் நிற்கும்.உடனே வரும் வார்த்தைகள் ,'ஆத்த கண்டு ஊத்து இறைக்கணும் ,அம்மியைக் கண்டு மிளகாய் அரைக்கணும்,எங்க வந்து எதனைக் கேக்கறே' என்றுசொல்வர்.வெறும் ஐந்து ருபாய் கிடைத்தால் போதும் உலகமே தங்கள் கையில் இருப்பது போல் பேசும் மக்கள் இன்னமும் உண்டு.அவர்களை உலகப் பெருசு ஒன்பது ருபாய் நோட்டு என்பர் .தகாத சிநேகிதிகளின் திருவிளையாடலுக்கு 'ஒண்ட வந்த பிடாரம் ஊருப்பேயை ஒட்டுச்சாம் ' இது விமர்சனம் . இது போன்ற அடைமொழிகள் எத்தனை எத்தனையோ .இன்று அதை அசை போடத்தான் ஆள் இருக்கிறதே ஒழிய பேசுவார் குறைந்து விட்டனர்.  எல்லாவற்றிலும் இந்த தாலாட்டு ஒப்பு தரம் பார்த்து வை என்பது மட்டும் மனதில் ஒலித்துக்கொண்டே உள்ளது. ஆம் இன்றளவிலும் எல்லாத்துறையிலும் அதை ஒத்து நினைத்து முடிவெடுப்பது நலமாகப் படுகிறது.    குழந்தைக்கு தாலாட்டும் பொழுதே நம் பகுமான உணர்வுக்கு உட்பட்டே கனவு காண வேண்டும் என்பதுதான் அதன் தாத்பரியம். இப்பொழுதும் கல்வி சாலையில் அவரவர் அறிவுத் திறன் பொறுத்து கற்றவர் வீண் போனதில்லை.     தமது  வருமானம் அறிந்து வளம் சேர்க்க ஆசைபடுபவரே வாழ்வில் வென்று நிற்கின்றனர்.  தமக்கு கிடைக்காதது தம் பிள்ளைக்கு கிடைக்கட்டும் என்று பேராசையில் அவர்கள் வென்றாலும் தம் மக்களிடம் வாழ்க்கையில் பெரும்பாலர் தோற்று நிற்பது வெளிப்படையானது. இவற்றை என் மனம் அசைபோட்டு பார்க்கையில் தான் இக்கட்டுரையை எழுதிவிட்டேன்.   

 கோதைதனபாலன்.











  

No comments:

Post a Comment