என் மழலை பருவம் கண்டெடுத்த நிலவே
முதுமையிலும் என்னுள் உலவி நிலவுகிறாய்
காலத்தில் எங்கெங்கு செல்லினும்
உடனிருந்து உள்ளமதை கொள்ளை கொள்கிறாய்
வியந்த நாள் பல உண்டு ,மயங்குகிறேன் மதிகெட்டு
நீரும் நிலமும் நீள் பரப்பில் மாறினும்
மாறி வரும் உன் அழகை பங்கிடும் வேளையில்
பிரபஞ்சமே 'உன் அடிமை எனச்சொல்லவோ
விரிகடல் உன் கைவிரலில் தவழும் பாங்கென்ன
ஏறிவரும் நிலமதில் நீ எழுதிடும் கோலங்கள் எத்தனை
விண் முட்டும் மலைதன்னை நீ முத்தமிட்டால்
ஓடி வருமோ இல்லை கூட வருமோ மேக நண்பர்கள்.
அந்த ஒரு தலைவன் கீழ வாசல்காரன் வரும் வரை
நீவிர் நடத்தும் நாடகங்கள் எத்தனை
பஞ்ச பூதத்தில் நெருப்பொன்றே உன்னிடம் வாரா
அதனால் தானோ குளுமை உன் சொந்தமானது
ஏனையர் உன் பார்வை பட்டு வர்ணம் பல கொண்டு
போடும் ஆட்டங்கள்தான் எத்தனை, எத்தனை
சலிக்காது மனங்கள் களிக்க வைக்கிறாய்
காலமெல்லாம் உழன்ற எரிசக்தியிலிருந்து மீள
நிழளொளி தரும் நிலவொளி நீ ஒரு சாந்த தீபம்
அமைதி தரும் தனிமை உனது
நிம்மதி தேடும் மனமோ எனது
வியாகூலங்கள் நான் சொல்லியே செல்வேன்
தலைமுறைக்கும் அது எஞ்சியே நிற்கும்
பங்கமுள்ள உன் முகப்பாங்கினும்
பாங்காய் எங்கள் பார்வை உன் மேல் விழுகிறதே
மாயம் உன்னிடம் இல்லை
ஆகாய வழி செல்லும் நிலவே
நீ கற்பனை அல்லவே
நீக்கமற எங்கும் எந்நாளும்
நிலவும் நிலவே நீதானே ..!
நான் மாறலாம்
இந்த நிலவு மாறுமோ
நாம் அழிந்துபடலாம்
இந்த நிலவு அழிவதுண்டோ
அன்றைக்கும் அதே நிலவுதான்
இன்றைக்கும் அதே நிலவுதான்
என்றைக்கும் ஒரே நிலவாய்
சொல்லிடுமே சேதி பல கோடி
No comments:
Post a Comment